திருஞானசம்பந்தர் தேவாரம் |
இரண்டாம் திருமுறை |
2.77 அறையணிநல்லூர் பண் - காந்தாரம் |
பீடினாற்பெரி யோர்களும் பேதைமைகெடத் தீதிலா
வீடினாலுயர்ந் தார்களும வீடிலாரிள வெண்மதி
சூடினார்மறை பாடினார் சுடலைநீறணிந் தாரழல்
ஆடினாரறை யணிநல்லூர் அங்கையால்தொழு வார்களே.
|
1 |
இலையினார்சூலம் ஏறுகந் தேறியேயிமை யோர்தொழ
நிலையினாலொரு காலுறச் சிலையினால்மதி லெய்தவன்
அலையினார்புனல் சூடிய அண்ணலாரறை யணிநல்லூர்
தலையினாற்றொழு தோங்குவார் நீங்குவார்தடு மாற்றமே.
|
2 |
என்பினார்கனல் சூலத்தார் இலங்குமாமதி யுச்சியான்
பின்பினார்பிறங் குஞ்சடைப் பிஞ்ஞகன்பிறப் பிலியென்று
முன்பினார்மூவர் தாந்தொழு முக்கண்மூர்த்திதன் தாள்களுக்
கன்பினாரறை யணிநல்லூர் அங்கையால்தொழு வார்களே.
|
3 |
விரவுநீறுபொன் மார்பினில் விளங்கப்பூசிய வேதியன்
உரவுநஞ்சமு தாகவுண் டுறுதிபேணுண தன்றியும்
அரவுநீள்சடைக் கண்ணியார் அண்ணலாரறை யணிநல்லூர்
பரவுவார்பழி நீங்கிடப் பறையுந்தாஞ்செய்த பாவமே.
|
4 |
தீயினார்திகழ் மேனியாய் தேவர்தாந்தொழும் தேவன்நீ
ஆயினாய்கொன்றை யாய்அன லங்கையாயறை யணிநல்லூர்
மேயினார்தம தொல்வினை வீட்டினாய்வெய்ய காலனைப்
பாயினாயதிர் கழலினாய் பரமனேயடி பணிவனே.
|
5 |
விரையினார்கொன்றை சூடியும் வேகநாகமும் வீக்கிய
அரையினாரறை யணிநல்லூர் அண்ணலாரழ காயதோர்
நரையினார்விடை யூர்தியார் நக்கனார்நறும் போதுசேர்
உரையினாலுயர்ந் தார்களும் உரையினாலுயர்ந் தார்களே.
|
6 |
வீரமாகிய வேதியர் வேகமாகளி யானையின்
ஈரமாகிய வுரிவைபோர்த் தரிவைமேற்சென்ற எம்மிறை
ஆரமாகிய பாம்பினார் அண்ணலாரறை யணிநல்லூர்
வாரமாய்நினைப் பார்கள்தம் வல்வினையவை மாயுமே.
|
7 |
தக்கனார்பெரு வேள்வியைத் தகர்த்துகந்தவன் தாழ்சடை
முக்கணான்மறை பாடிய முறைமையான்முனி வர்தொழ
அக்கினோடெழில் ஆமைபூண் அண்ணலாரறை யணிநல்லூர்
நக்கனாரவர் சார்வலால் நல்குசார்விலோம் நாங்களே.
|
8 |
வெய்யநோயிலர் தீதிலர் வெறியராய்ப்பிறர் பின்செலார்
செய்வதேயலங் காரமாம் இவையிவைதேறி யின்புறில்
ஐயமேற்றுணுந் தொழிலராம் அண்ணலாரறை யணிநல்லூர்ச்
சைவனாரவர் சார்வலால் யாதுஞ்சார்விலோம் நாங்களே.
|
9 |
வாக்கியஞ்சொல்லி யாரொடும் வகையலாவகை செய்யன்மின்
சாக்கியஞ்சம ணென்றிவை சாரேலும்மர ணம்பொடி
ஆக்கியம்மழு வாட்படை அண்ணலாரறை யணிநல்லூர்ப்
பாக்கியங்குறை யுடையீரேற் பறையுமாஞ்செய்த பாவமே.
|
10 |
கழியுலாங்கடற் கானல்சூழ் கழுமலம்அமர் தொல்பதிப்
பழியிலாமறை ஞானசம் பந்தன்நல்லதோர் பண்பினார்
மொழியினாலறை யணிநல்லூர் முக்கண்மூர்த்திகள் தாள்தொழக்
கெழுவினாரவர் தம்மொடுங் கேடில்வாழ்பதி பெறுவரே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |